இந்தியாவில் தொழில் துவங்க சாதகமான சூழல் நிலவுவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். வேளாண், பாதுகாப்பு துறையில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தஙகள் முதலீட்டிற்கு உகந்தவை எனவும் தெரிவித்துள்ளார்.
பொருளாதர வளர்ச்சியை அதிகரிப்பதற்கான இந்தியா குளோபல் வீக் என்ற இணையவழி மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது:
தற்போதைய சூழ்நிலையில், மீண்டு வருவது குறித்து பேசுவது இயற்கை தான். சர்வதேச அளவில் மீட்சி பெறுவதை, இந்தியாவையும் தொடர்புபடுத்துவதும் இயற்கைதான். சர்வதேச பொருளாதார மீட்சியில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும் என அனைவரும் நம்புகின்றனர். இந்தியா எப்போதும் தன்னை புதுப்பித்து கொண்டு வளர்கிறது. இந்தியாவின் திறமைசாலிகளின் சக்தியை உலகம் முழுவதும் பார்த்திருப்பீர்கள். இந்திய தொழில் நுட்பத்துறை மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களை யாரும் மறக்க முடியாது. அவர்கள் பல ஆண்டுகளுக்கான வழியை காட்டியுள்ளனர். திறமைசாலிகளுக்கான மையமாக இந்தியா திகழ்கிறது. அவர்கள், தங்களது பங்களிப்பை அளிக்க விரும்புகின்றனர்.
இயற்கையை இறைவனாக வழிபடுவதுதான் இந்தியர்கள் மரபு .உலகமே இந்தியாவின் திறனை கண்டு வியக்கிறது. கொரோனாவுக்கு எதிராக இந்தியா வலுவான போரை நடத்தி வருகிறது. பேரிடர் காலத்தில் நாட்டு மக்களுக்கு தேவையான சலுகைகளை அரசுவழங்கியுள்ளது. ஏழ்மை நிலையில் இருப்பவர்களுக்கு சிறப்பு நிதி நேரடியாக வழங்கப்பட்டுள்ளது. இலவச காஸ், உணவு பொருள், கடன் ஆகியவை பயனாளர்களுக்கு நேரடியாக வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். லட்சகணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு திட்டத்தால், நகர்ப்புற பொருளாதாரம் வலுப்படும்.
கொரோனா தொற்றானது, இந்தியாவின் மருத்துவத்துறை, இந்தியாவிற்கு மட்டுமல்ல, உலகத்தின் சொத்து என்பதை எடுத்து காட்டியுள்ளது. இந்த துறையானது, மருந்துகளின் செலவை குறைப்பதில் மட்டுமல்லாமல், வளரும் நாடுகளுக்கு முக்கிய பங்காற்றுகிறது. இந்திய மருத்துவத்துறை ஒட்டுமொத்த உலகத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. கொரோனாவுக்கு தடுப்பூசியை கண்டுபிடிப்பதிலும், உற்பத்தியிலும் இந்தியாவின் பங்கு மிகப்பெரியதாக இருக்கும். உலக நலனுக்கு தேவையான நடவடிக்கையை இந்தியா எடுக்கும்.
சமூகம் , பொருளாதாரம் என ஒவ்வொரு சவாலையும் இந்தியா வென்றுள்ளதை வரலாறு காட்டுகிறது. கொரோனாவுக்கு எதிராக வலுவான யுத்தத்தை நடத்தி வருகிறோம். மக்களின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்தும் நாம், நாட்டின் பொருளாதாரத்தின் மீதும் நாம் சமமாக கவனம் செலுத்துகிறோம். உலகளவில் , திறந்த பொருளாதாரம் கொண்ட முக்கிய நாடாக இந்தியா திகழ்கிறது.
சர்வதேச நிறுவனங்கள் இங்கு வந்து, அவர்களின் தடம் பதிக்க, நாம் சிவப்பு கம்பளம் விரித்துள்ளோம். இன்று இந்தியா செய்ததை,சிலநாடுகளே செய்துள்ளன. பல்வேறு துறைகளில் முதலீடுக்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. வேளாண், பாதுகாப்பு துறையில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் முதலீட்டிற்கு உகந்தவை.உலகில் உள்ள பெரு நிறுவனங்கள் தொழில்துவங்க இந்தியாவில் சாதகமான சூழல் நிலவுகிறது. விண்வெளித்துறையில் தனியார் துறைகளும் கால்பதிக்க வாய்ப்பு ஏற்படுத்தியுள்ளோம். இவ்வாறு பிரதமர் பேசினார்.